குழித்துறை மறைமாவட்டத்தின் வரலாறு

அருட்பணி பவுல் லியோன் வறுவேல்

கிறிஸ்து அரசர் குருத்துவக் கல்லூரி

பஃபலோ மறைமாவட்டம், நியூயார்க்2014ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 22ஆம் நாள் தமிழகக் கத்தோலிக்க திருச்சபைக்கு மகிழ்ச்சி நிறைந்த ஒரு பெருநாள். அன்றுதான் மாண்புமிகு திருத்தந்தை பிரான்சிசு, தமிழகத்தின் 18ஆம் மறைமாவட்டமாக குழித்துறை மறைமாவட்டம் என்ற பெயரில் புதியதொரு மறைமாவட்டத்தை நிறுவி, கத்தோலிக்க திருச்சபைக்கு வளம் சேர்த்தார்.

அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய குழித்துறை மறைமாவட்டப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்த அருள்திரு ஜெரோம்தாஸ் வறுவேல் (சலேசிய சபை) அவர்கள் அம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் திருத்தந்தை பிரான்சிசு அதே நாளில் அறிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடமாகிய வத்திக்கான் நகரிலிருந்து வெளியான இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு குழித்துறை மறைமாவட்டத்தின் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி, குமரி மாவட்டத்தின் அனைத்து மக்களுமே பெருமிதம் கொண்டனர்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய குழித்துறை மறைமாவட்டம் உண்மையிலேயே உருவாகிவிட்டது என்ற செய்தி ஓர் இன்ப அதிர்ச்சி போல வந்து சேர்ந்தது என்றால் அது மிகையாகாது.

1) மறைமாவட்டம் என்றால் என்ன?

குழித்துறை மறைமாவட்டத்தின் வரலாற்றை எடுத்துக் கூறுமுன், மறைமாவட்டம் என்றால் என்ன என்ற கேள்விக்குச் சுருக்கமாகவாவது பதில் காண்பது தேவை. உலகளாவிய கத்தோலிக்க திருச்சபை என்பது தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூவொரு இறைவனின் பெயரால் ஒன்றுசேர்க்கப்பட்டு, இயேசுவின் சீடர்களாக உரோமைத் திருத்தந்தையின் தலைமையின் கீழ் வழிநடக்கின்ற அனைத்துலக இறைமக்களின் திருக்கூட்டம் ஆகும். இந்த இறைமக்கள் திருக்கூட்டத்தோடு, பிற கிறிஸ்தவர்கள், பிற சமயத்தினர், ஏன் எல்லா மக்களுமே வெவ்வேறு வகைகளில் தொடர்புடையவர்களே.

திருச்சபையின் நிர்வாக முறைமைகளை நெறிப்படுத்துகின்ற ஏடாகியதிருச்சபைச் சட்டத் தொகுப்பு(Code of Canon Law) மறைமாவட்டத்தைக் கீழ்வருமாறு வரையறுக்கிறது:

மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்; இவ்வாறு, தன் மேய்ப்பரோடு இணைந்து, தூய ஆவியில் நற்செய்தி, நற்கருணை வழியாக அவரால் ஒன்று கூட்டப்பட்டு அது ஒரு தனித்திருச்சபையாக உருப்பெறுகிறது; அதில் ஒரே, தூய கத்தோலிக்க, திருத்தூதுவர் திருச்சபை உண்மையாகவே உள்ளது; செயலாற்றுகிறது- (திருச்சபைச் சட்டம் எண் 369).

உலகத் திருச்சபையின் தனிப் பகுதிகள் போலத் தம்மிலே முழுமைகொண்டு செயல்படுகின்ற நம்பிக்கை சமூகங்கள் மறைமாவட்டங்கள் என்றால், அந்த மறைமாவட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றை ஒன்றோடொன்று இணைப்பதற்கும், அவற்றை அகற்றுவதற்கும் திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தைக்கு மட்டுமே முழு அதிகாரமும் உரிமையும் உண்டு. இதைத் திருச்சபைச் சட்டம் எண் 373 எடுத்துக் கூறுகிறது..

இவ்வாறு, இன்று ஆட்சிப் பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலே வாழ்கின்ற கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவர்கள், மற்றும் எல்லா மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை அறிந்து உளம் மகிழ்கின்றது.

2) குழித்துறை மறைமாவட்டத்தின் நில ஆள்மைக் கூறுகள்

குழித்துறை மறைமாவட்டம் எந்த எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிசு தமது ஆவண ஏட்டில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, குழித்துறை மறைமாவட்டம் கோட்டாறு என்னும் தாய் மறைமாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படுகிறது. குழித்துறை மறைமாவட்டத்தின் வடக்கிலும் வடகிழக்கிலும் பாளையங்கோட்டை மறைமாவட்டமும், கிழக்கிலும் தெற்கிலும் புதிய கோட்டாறு மறைமாவட்டமும், தென்மேற்காக இந்தியப் பெருங்கடலும், மேற்கில் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டம் மற்றும் நெய்யாற்றின்கரை மறைமாவட்டமும் (கேரளம்) எல்லைகளாக அமையும் என்று திருத்தந்தை தமது ஆவணத்தில் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.

கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாகின்ற மறைமாவட்டமே குழித்துறை மறைமாவட்டம் என்பதால் அதன் வரலாறு கோட்டாறு மறைமாவட்டத்தின் வரலாற்றோடு தொடக்கத்திலிருந்தே பின்னிப் பிணைந்தது என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, குழித்துறை மறைமாவட்டத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு கோட்டாறு மறைமாவட்டத்தின் வரலாறு இன்றியமையாததாக உள்ளது.

(கோட்டாறு மறைமாவட்டத்தின் விரிவான வரலாற்றை அறிய, கீழ்வரும் நூல்களைக் காண்க: அருட்பணி. எம். வில்லவராயன் எழுதிய The Diocese of Kottar: A Review of Its Growth [வெளியான ஆண்டு: 1956]; அருட்பணியாளர்கள் சே. ரோ. நற்சீசன், . பிரான்சிஸ், . பவுல் லியோன், வில்பிரட் பெலிக்ஸ் ஆகியோர் எழுதிய Called to Serve: A Profile of the Diocese of Kottar [வெளியான ஆண்டு: 1983]; பவள விழா மலர்: கோட்டாறு மறைமாவட்டம் 1930-2005 [வெளியான ஆண்டு: 2005]).

3) கோட்டாறு தாய் மறைமாவட்டம் ஈன்ற குழந்தை குழித்துறை மறைமாவட்டம்

குழித்துறை மறைமாவட்டம், 1930ஆம் ஆண்டில் தன்னாட்சியோடு நிறுவப்பட்ட கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து ஒரு புதிய மறைமாவட்டமாக உருவெடுத்துள்ளது. கோட்டாறு தாய் என்றால் குழித்துறை அதன் சேய் எனலாம். அதே நேரத்தில் கோட்டாற்றுக்கும் குழித்துறைக்கும் உள்ள உறவை “சகோதர உறவு” என்றும் நாம் கூறலாம். குழித்துறை மறைமாவட்டம் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மறைமாவட்டமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு மறைமாவட்டங்களும் சம மதிப்பும் மாண்பும் கொண்ட திருச்சபைப் பகுதிகளாக விளங்குகின்றன.

குழித்துறை தனி மறைமாவட்டமாக உருவாகின்ற அதே நேரத்தில், கோட்டாறு என்னும் புதிய மறைமாவட்டமும் உருப்பெற்று விட்டது. எனவே, இரு மறைமாவட்டங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்வது பொருத்தமே. கோட்டாறு-குழித்துறை மறைமாவட்டங்களின் வரலாற்றுப் பின்னணி என்ன?

குழித்துறை மறைமாவட்டம் உருவான வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அந்த வரலாற்றுக் காலத்தை மூன்று பெரிய காலக் கட்டமாகப் பார்க்கலாம்:

1) கோட்டாறு தனி மறைமாவட்டம் ஆவதற்கு முற்பட்ட காலம்

2) கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் அறுபது ஆண்டுகள்

3) குழித்துறை மறைமாவட்ட உருவாக்கச் செயல்பாடு நிகழ்ந்த காலம்

முதல் கட்டம்

கோட்டாறு தனி மறைமாவட்டம் ஆவதற்கு முற்பட்ட காலம்

1) பண்டைய தடயங்கள்

தமிழகத்தின் தென்முனையாம் குமரி நிலத்தில், கோட்டாறு மறைமாவட்டப் பகுதியில், கிறிஸ்தவ சமய நம்பிக்கை தொன்றுதொட்டே நிலவியதற்கான அகழ்வுத் தடயங்கள் சின்னமுட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருத்தூதர் புனித தோமா கேரளத்திலும் கோட்டாறு மறைமாவட்டம் அமைந்துள்ள குமரி நிலப்பகுதியிலும் நற்செய்தியை அறிவித்து, வழிபாட்டு இடங்களை நிறுவினார் என்னும் தொல்மரபும் பல நூற்றாண்டுகளாக வழங்கிவருகின்றது. திருவிதாங்கோட்டில் அமைந்து, தற்போது சிரிய மலங்கரை ஆர்த்தடாக்ஸ் சபையினரின் பொறுப்பில் உள்ள “அரப்பள்ளி” என்ற சிறு கோவில், திருத்தூதர் புனித தோமா தொடங்கிய வழிபாட்டுத் தலத்தின் மீது எழுந்தது என்னும் மரபும் உள்ளது.

புனித தோமாவின் இந்திய மறைப்பணி பற்றிய மரபுவழிச் செய்தியை உறுதிப்படுத்துவதற்கு அறுதியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்றாலும், குமரி நிலப்பகுதியில் புனித பிரான்சிஸ் சவேரியார் பணியாற்றத் தொடங்கிய காலத்திற்கு முன்னரே கிறிஸ்தவ நம்பிக்கை அங்கு வேரூன்றத் தொடங்கிவிட்டிருந்தது என்பதற்கு உறுதியான வரலாற்று ஆதாரம் உள்ளது.

2) பரவர் குலத்தவர் கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

16ஆம் நூற்றாண்டில் அரேபிய வணிகரும் முசுலிம்களும் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்தலிலும் முத்துக்குளித்தலிலும் ஈடுபட்டிருந்த பரவர் குல மக்கள்மீது தாக்குதல்கள் நடத்திய வேளையில் பரவர் குலத் தலைவர்கள் போர்த்துகீசியரின் பாதுகாப்பை நாடினர். பாதுகாப்பு அளித்த போர்த்துகீசியர் குமரி முதல் இராமேசுரம் வரையிலான பகுதியில் வாழ்ந்த சுமார் இருபது ஆயிரம் பரவர்களுக்குத் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்த்தனர். 1536-1537 ஆண்டளவில் இந்த “குழு மதமாற்றம்” நிகழ்ந்தது.

புதிதாக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய இவர்களுக்கு மறைப்பணி புரிய போதிய பணியாளர்கள் இல்லாததால் தளர்நிலையிலிருந்த அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் மேலும் பலரைக் கிறிஸ்தவத்துக்குக் கொணரவும் புனித பிரான்சிஸ் சவேரியார் அவர்களிடையே 1542 அக்டோபர் மாதத்திலிருந்து 1543 செப்டம்பர் வரை பணிபுரிந்தார். சில மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் பெப்ருவரி 1544இல் தமது பணியைத் தொடர்ந்தார். இவ்வாறு, குமரி நிலப்பகுதியில், குறிப்பாக, கன்னியாகுமரி, கோவளம், இராஜாக்கமங்கலம் போன்ற பரவர் கிராம மறைப்பணித் தளங்களில் கத்தோலிக்க சமயம் தளிர்விடத் தொடங்கியது.

குமரிப் பகுதியில் சவேரியார் ஆற்றிய பணி மறைப்போதகம் மட்டுமன்று. புதிதாக கிறிஸ்தவத்தைத் தழுவிய பரவ மக்களுக்கு அவர் துன்பவேளையில் துணையாகவும் வந்தார்.

தம் மக்களாகிய கிறிஸ்தவர்களைக் கிறிஸ்தவரல்லாதவர்களின் தாக்குதல்களிலிருந்தும் போர்த்துகீசியர்களின் அட்டூழியங்களிலிருந்தும் பாதுகாத்த சவேரியாரை மக்கள் “பெரிய தந்தை” என்னும் பொருள்தருகின்ற ”வலிய பாதிரி” என்னும் பெயரிட்டு அன்புடன் அழைத்தார்கள்.

3) முக்குவர் குலத்தவர் கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

சவேரியாரின் அடுத்த மறைப்பணி திருவிதாங்கூர் இராச்சியத்தில் முக்குவர் நடுவே நிகழ்ந்தது. திருவிதாங்கூரை ஆட்சி செய்த இராம வர்மா என்ற உண்ணிகேரள திருவடியும் அவருடைய சகோதரர் மார்த்தாண்ட வர்மாவும் பாண்டிய மன்னன் படையெடுப்பிலிருந்து தம்மைப் பாதுகாக்க போர்த்துகீசியரின் உதவியை நாடினர். அவ்வாறு தமக்குப் படை உதவியும் பாதுகாப்பும் அளித்தால் திருவிதாங்கூர் இராச்சியத்தில் மீனவ மக்களாகிய முக்குவர் குலத்தாரிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு அனுமதி அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். பரவ மக்களிடையே கிறிஸ்தவ மறையைப் பரப்பிய சவேரியார் தங்கள் பகுதியிலும் அவ்வாறே செய்யவேண்டும் என்று மணக்குடி முக்குவர் விரும்பிக் கேட்டனர். திருவிதாங்கூர் மன்னர்களும் முக்குவர்கள் தமக்குக் கீழ்ப்படிந்திருப்பது போலவே, “வலிய பாதிரி” (சவேரியார்) சொல்வதைக் கேட்டு, தங்களுக்கு விருப்பமானால் கிறிஸ்தவர்களாக மாறத் தடையில்லை என்று அறிவித்தனர். மேலும், திருவிதாங்கூர் மன்னரான இராம வர்மா 2000 பணத்தை சவேரியாரிடம் கொடுத்து அதைக் கொண்டு கோவில்கள் கட்ட அனுமதித்தார்.

பலவகையான வரிச்சுமைகளால் அழுத்தப்பட்டு, அரசு அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டு, சமூக மாண்பு மறுக்கப்பட்டு, வறுமையில் வாழ்ந்த அம்மக்கள், தங்களது இழிநிலையிலிருந்து விடுபட்டு, திருமுழுக்குப் பெற்று, போர்த்துகீசியரின் பாதுகாப்பைப் பெறுவதை ஒரு வரப்பிரசாதமாகவே கருதினர்.

இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு சவேரியார் முக்குவர் வாழ்ந்த கடலோரக் கிராமங்களை ஒவ்வொன்றாகக் கால்நடையாகச் சென்று சந்தித்து, 1544 நவம்பரிலிருந்து 1544 டிசம்பர் வரை அவர்களுக்குக் கிறிஸ்தவ மறையை அறிவித்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குத் திருமுழுக்கு அளித்து அவர்களை இந்து சமயத்திலிருந்து மனம் திருப்பி கிறிஸ்தவத்தைத் தழுவச் செய்தார்.

சவேரியார் தம்மோடு ஒருசில துணையாளர்களை அழைத்துக்கொண்டு, திருவிதாங்கூர் இராச்சியத்தின் வட எல்லையாகிய பூவாற்றிலிருந்து முக்குவ மக்களிடையே தம்முடைய மறைப்பணியைத் தொடங்கினார். இவ்வாறு அவர் கிறிஸ்தவ சமயத்தைப் போதித்த முக்குவர் கிராமங்கள் பூவாறு, கொல்லங்கோடு, வள்ளவிளை, தூத்தூர், புதுத்துறை, தேங்காப்பட்டணம், இனையம், மிடாலம், வாணியக்குடி, குளச்சல், கடியபட்டணம், முட்டம், பள்ளம் ஆகும். அத்தருணத்தில் யாழ்ப்பாண மன்னன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொல்கிறான் என்ற அதிர்ச்சிதரும் செய்தியைக் கேட்டு சவேரியார் முக்குவ கிராமங்களில் திருமுழுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு கொச்சிக்கு விரைந்தார். இவ்வாறு, மணக்குடிக்கு மட்டும் சவேரியாரால் நேரடியாகச் சென்று திருமுழுக்குக் கொடுக்க இயலவில்லை. ஆனால் அங்கு சென்று திருமுழுக்குக் கொடுக்க அவர் தம் துணையாளரான மான்சீலாஸ் என்பவரை அனுப்பிவைத்தார்.

4) உள்நாட்டு மக்களிடையே கிறிஸ்தவம் பரவுதல்

கடலோரத்தில் மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தபின் சவேரியார் குமரிப் பகுதியின் உள்நாட்டு மக்களையும் கிறிஸ்தவ மறையில் சேர்க்க ஆர்வம் கொண்டார். ஆனால் அன்றைய சமூக-அரசியல் நிலை அதற்குத் தடையாக அமைந்தது. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று வேறுபாடு கற்பித்து, பெரும்பாலான மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்ட காலம் அது. இந்து சமயத்தின் சாதி அமைப்பைத் தளர்த்திவிட்டால் தம்முடைய அதிகாரம் பறிபோய்விடும் என்று உயர்சாதியினர் நினைக்க, நாட்டில் கிறிஸ்தவம் பரவினால் சமூகக் கட்டமைப்பு தளர்ந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் எண்ணிய காலம் அது.

இப்பின்னணியில்தான் திருவிதாங்கூர் மன்னர்கள் விஜயநகரப் படைகளோடு மோதினர். விஜயநகர அரசைப் பகைக்க விரும்பாத போர்த்துகீசியர்கள் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டனர். இதனால் கோபமுற்ற திருவிதாங்கூர் மன்னர்கள் இந்தியாவில் பணிசெய்த போர்த்துக்கல் ஆளுநர்களையும் அவர்களுடைய மறைபரப்பாளர்களையும் தண்டிக்க எண்ணி, தமது இராச்சியத்தில் இனிமேல் கிறிஸ்தவத்தைப் பரப்பக் கூடாது என்று தடைவிதித்தனர். இயேசு சபையைச் சார்ந்த தந்தை பிரான்சிஸ் ஹென்றிக்கெஸ் என்பவரையும் அவருடைய ஒரே துணையாளரான சகோதரர் பல்தசார் நூனெஸ் என்பவரையும் இராச்சியத்திலிருந்து வெளியேற்றினர்.

இவ்வாறாக, கடலோரத்திலேயே முதலில் கவனம் செலுத்திய போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் உள்நாட்டுப் பகுதிகளில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இருப்பினும், கடலோரப் பரவர் மற்றும் முக்குவர் குழுவாகக் கிறிஸ்தவர்களான சுமார் 50 ஆண்டுகளில், அதாவது 1603இல் உள்நாட்டுப் பகுதிகளில் ஏழு கோவில்கள் கட்டப்பட்டன. கடற்கரை கிராமங்களில் திருமுழுக்குப் பெற்று, தொழில் காரணமாக உள்நாடு சென்ற மீனவருக்கு மறைப்பணி புரிய குருக்கள் இல்லாமையால் அவர்களது கிறிஸ்தவ நம்பிக்கை நலிவுற்றது.

இயேசு சபைக் குருவான அந்திரேயா புச்சேரியோ, திருவிதாங்கூர் மன்னர் வீர ரவிவர்மாவிடம் உதவிபெற்று கல்குளத்தில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் இரு கோவில்கள் கட்டினார். மூன்றாவதொரு கோவில் கோட்டாற்றில் அரசன் அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு தோட்டப்பகுதியில் 1603இல் கட்டப்பட்டது. கல்லால் கட்டப்பட்டு, மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்கோவிலில் தந்தை புச்சேரியோ புனித சவேரியாரின் திருப்படம் ஒன்றை நிறுவியதைத் தொடர்ந்து சவேரியார் பக்தி இன்னும் அதிகமாக வளர்ந்தது.

கோட்டாறு கோவிலைக் கட்ட மணக்குடி, பள்ளம், பெரியகாடு, ராஜாக்கமங்கலம் ஆகிய கிறிஸ்தவ கிராமங்களும் உதவிசெய்தன. சில ஆண்டுகளுக்குள் கோட்டாறு கோவில் சவேரியார் பக்திக்குப் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாக மாறியது.

கோட்டாற்றுக்குக் கிளைப்பங்குகளாக மார்த்தாண்ட நல்லூர் (மாத்தால்?), ஆளூர், கல்குளம் ஆகியவை அமைந்தன. இந்த கிளைப்பங்குகளின் பல கிராமங்களிலும் மலைப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் பரவலாக வாழ்ந்தார்கள்.

6) நாடார் சமூகத்தினர் கத்தோலிக்க மறையைத் தழுவுதல்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வாழ்ந்த நாடார் சமூகத்தினர் 17ஆம் நூற்றாண்டில் அங்கும் இங்குமாக சிறு எண்ணிக்கையில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்று, திருமுழுக்குப் பெற்றனர். என்றாலும், அவர்களுள் பெரும்பான்மையோர் 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரையும் இந்துக்களாகவே இருந்தனர்.

குமரி நிலப்பகுதியில் 1550-1600 காலக்கட்டத்தில் சமூக-அரசியல் குழப்பம் நிலவியது. விஜயநகரத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பாண்டிய நாடு திருவிதாங்கூரைத் தாக்கியது. திருவிதாங்கூர் மக்கள் வரிச்சுமையால் அழுத்தப்பட்டு அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள்.

அதே நேரத்தில் போர்த்துகீசிய மன்னரின் பாதுகாப்பின் கீழ் பணிபுரிந்த கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் பெரும்பாலும் கடற்கரையிலேயே கவனம் செலுத்தினர். கடல் வணிகத்தைத் தக்கவைப்பதில் போர்த்துகல் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும் திருவிதாங்கூர் இராச்சியத்தைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்குவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சில வரலாற்று நிகழ்வுகள் குமரி, திருவிதாங்கூர், பாண்டிநாடு போன்ற பகுதிகளில் கிறிஸ்தவம் பரவிட வாய்ப்பாக அமைந்தன. திருச்சபையின் செயல்பாடுகளில் போர்த்துகல் ஆட்சியாளர்கள் தலையிடுவதைக் கட்டுப்படுத்தவும், குடியேற்ற நாடுகளில் புரட்டஸ்தாந்து கிறித்தவம் பரவுவதை நிறுத்தவும் வேண்டுமென்றால் குடியேற்ற அரசின் கட்டுப்பாட்டைத் தாண்டிய விதத்திலும் திருச்சபையின் நேரடி கண்காணிப்பிலும் செயல்படுகின்ற மறைபரப்புக் குருக்கள் தேவை என்ற அடிப்படையில் உரோமையில் “மறைபரப்புப் பேராயம்” (Congregation for the Propagation of the Faith) 1622இல் தொடங்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் துறவற சபைகள் சார்ந்த குருக்கள் மறைபரப்புவதற்காக அனுப்பப்பட்டார்கள். குறிப்பாக மதுரையைப் பணிமையமாகக் கொண்டு இயேசு சபையினர் போர்த்துகீசிய கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் உள்நாட்டுப் பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைக் கொண்டுசென்றனர்.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பாவில் 1773இல் இயேசு சபை தடைசெய்யப்பட்டது. எனவே, மதுரை பணித்தளத்தின் செயல்பாட்டில் தளர்ச்சி ஏற்பட்டது. 1814இல் இயேசு சபை மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருச்சியை மையமாகக் கொண்டு புதிய மதுரை பணித்தளம் செயல்படலாயிற்று.

மேற்கூறிய அரசியல் நிகழ்வுகளும், ஐரோப்பாவில் சீர்திருத்த கிறிஸ்தவம் பரவிய நிகழ்வும் குடியேற்ற நாடுகளில் கிறிஸ்தவம் பரவுவதில் பாதிப்பை ஏற்படுத்தின.

இப்பின்னணியில் தான் குமரி நிலப்பகுதியில் நாடார் சமூகத்தவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவுவதற்கு இயேசு சபையினரின் மதுரைப் பணித்தளத்தின் கீழ் இருந்த கயத்தாறு மற்றும் காமநாயக்கன்பட்டியின் நாடார் கிறிஸ்தவ சமூகங்கள் துணையாக இருந்தன என்று இயேசு சபை குறிப்பு கூறுகிறது. 1653இல் கயத்தாற்றிலும், 1666இல் காமநாயக்கன்பட்டியிலும் நாடார் கத்தோலிக்கரும் அவர்களுக்கென்று கோவிலும் இருந்தது. 1684 அளவில் காமநாயக்கன்பட்டி இயேசு சபை மதுரைப் பணித்தளத்தின் தென்பகுதிக்கு மையமாயிற்று. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 600 பேர் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றனர். அங்கு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்ற நாடார் சிலர் தங்கள் சமய நம்பிக்கையின் பொருட்டுத் துன்புறுத்தப்பட்ட வேளையில் குமரி நிலத்தில், கோட்டாறு பகுதிகளில் வந்து பதினெட்டாம் நூற்றாண்டில் குடியேறினர் என்பது வரலாறு.

குமரி நிலப் பகுதியில் நாடார் சமூகத்தினர் பலருக்கு 1685ஆம் ஆண்டளவில் முதன்முதலாகத் திருமுழுக்கு அளித்தவர் அருள்தந்தை பீட்டர் மொராத்தோ (Peter Morato) என்னும் இயேசு சபைக் குரு ஆவார். நாடார் சமூகத்தினர் நடுவே கிறிஸ்தவ சமயத்தை அறிவிக்கும் பொறுப்பு அப்போது கோட்டாறு பங்குத் தளத்திற்குப் பொறுப்பாக இருந்த அருள்தந்தை ஜாண் மேனார்து (John Maynard) என்னும் இயேசு சபைக் குருவிடம் 1698இல் அவருடைய மாநிலத் தலைவரான அந்திரேயா கோமஸ் என்பவரால் ஒப்படைக்கப்பட்டது. 1699இல் நிறுவப்பட்ட வடக்கன்குளம் பணித்தளத்தை மையமாகக் கொண்டு இயேசு சபைக் குரு பெர்னார்து தே சா என்பவரும் பிற இயேசு சபைக் குருக்களும் நாடார் மற்றும் வெள்ளாளர் நடுவே கிறிஸ்தவ மறையைப் பரப்பி, பலருக்குத் திருமுழுக்கு அளித்தனர்.

தந்தை மேனார்து நாடார் குல மக்கள் பலரைக் கிறிஸ்தவத்திற்குக் கொணர்ந்தார். மேலும் அவர் இந்திய சந்நியாசி போன்று உடையணிந்து நாயர்கள் நடுவே பணிபுரிந்து அவர்களையும் கிறிஸ்தவர்கள் ஆக்கினார். ஆனால், நாயர்கள், தம்மைவிடவும் சமூகநிலையில் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட நாடார்களுக்கும் தந்தை மேனார்து கிறிஸ்தவத்தைப் போதித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினார் என்று குறைகூறி, இந்துமதத்திற்கே திரும்பிவிட்டனர்.

மேலும், தே சா அடிகள் கோட்டாற்றுக்குக் கிழக்கே சுமார் 5 மைல் தொலையில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்பினார். அங்கும் நாடார் மற்றும் வெள்ளாளர் பலர் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். இவர்கள் புனித அருளானந்தரின் கைகளால் திருமுழுக்குப் பெற்றிருக்கலாம் என்று மதுரைப் பணித்தளத்தில் மறைப்பணி ஆற்றிய இயேசு சபை வரலாற்றாசிரியர் லியோன் பெஸ் (Leon Besse) என்பவர் கருதுகிறார்.

(ஆதாரம்: லியோன் பெஸ் எழுதிய The Madurai Mission என்னும் நூல். முதன்முறையாக பிரஞ்சு மொழியில் 1914இல் திருச்சிராப்பள்ளியில் வெளியானது. காண்க: பக்கங்கள் 570, 577)

மேற்கூறிய மறைப்பணி நிகழ்ந்த அதே காலக் கட்டத்தில் உள்நாட்டில் மீன்வியாபாரம் செய்து வாழ்ந்துவந்த மீனவர் சமூகங்களைச் சார்ந்த பலரும் கத்தோலிக்கராக மாறினார்கள். 1713இல் குமரி நிலப்பரப்பில் 24 முக்குவர் மற்றும் பரவர் சவளக்காரர் குடியிருப்புகள் இருந்ததாக இயேசு சபைக் குருவும் வரலாற்றாசிரியருமான தோமினிக் ஃபெரோலி என்பவர் கூறுகிறார்.

(ஆதாரம்: சே ரோ. நற்சீசன் எழுதிய “குமரிக் கிறிஸ்தவர்களின் பயணப் பாதை”, 2010 பதிப்பு, பக். 76)

7) சாந்தாயி நாடாத்தி என்னும் மறைபரப்பாளர்

இயேசு சபையைச் சார்ந்த பிரஞ்சு மறைபரப்பாளர் அருள்திரு அதிரியான் கவுசானல் இருதயகுளத்தில் “திரு இருதய சகோதரர்கள் சபை”யை 1925ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர். வடக்கன்குளத்தில் பணியாற்றிய அவர் பதித்துள்ள சில குறிப்புகளைக் கீழே காணலாம்:

சுமார் 1680ஆம் ஆண்டளவில், சாந்தாயி என்ற பெயர்கொண்ட சாணார் பெண் ஒருவர் தம் கணவர் ஞானமுத்து என்பவரோடு ஆனக்கரை பங்கின் தோப்புவிளை என்ற ஊரிலிருந்து வந்தார். சாந்தாயி இன்று வடக்கன்குளம் என்று அறியப்படுகின்ற ஊரில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம் பரவுவதற்குக் காரணமாக இருந்தவே அவரே. அவர் மனம் திருப்பியவர்களுள் மிகப் பலர் நாடார் சமூகத்தினரே. மேலும், திருவிதாங்கூரிலிருந்து பாண்டிய இராச்சியத்திற்குச் செல்லும் வழியில் வடக்கன்குளம் இருந்ததால் அங்கு நிறுவப்பட்ட மறைப்பணித் தளம் அன்றைய கோட்டாறு மறைமாவட்ட உள்நாட்டுப் பகுதிகளில் கத்தோலிக்க சமயம் பரவுவதற்கு மிகவும் துணையாக இருந்தது.

1720ஆம் ஆண்டளவில் வடக்கன்குளத்தை மையமாகக் கொண்ட தென் திருவிதாங்கூர் பகுதியில் சுமார் 3000 நாடார்கள் கத்தோலிக்கர் ஆயினர்.

இக்குறிப்புகள் மதுரை பணித்தளத்தில் பணிபுரிந்த இயேசு சபை குருக்களின் பதிவுகளிலிருந்து அறியக் கிடக்கின்றன.

(ஆதாரம்: அருள்திரு அதிரியான் கவுசானல், சே.., திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்புகள், திருநெல்வேலி, 1925, பக். 140-142).

1685இலிருந்து குமரிப் பகுதி நாடார் குல மக்கள் பெருமளவில் கத்தோலிக்கர்கள் ஆனார்கள். அவர்களது முக்கிய பணிமையங்களாக காரங்காடு (முளகுமூடு மறைவட்டம்கல்குளம் வட்டம்), வேங்கோடு (திரித்துவபுரம் மறைவட்டம்விளவங்கோடு வட்டம்) ஆகியவை அமைந்தன. காரங்காட்டின் கிளைப் பணித்தளங்களாக 18ஆம் நூற்றாண்டில் இரணியல், மாங்குழி, முளகுமூடு, மணலிக்கரை, மாத்திரவிளை, ஆலஞ்சி, முள்ளங்கினாவிளை, பழையகடை ஆகிய இடங்கள் விளங்கின. அதுபோல, வேங்கோடு பணிமையத்தின் கீழ் புதுக்கடை, களியக்காவிளை, குழித்துறை, பாறசாலை ஆகிய கிளைப் பணித்தளங்கள் அமைந்தன.

1871ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி கோட்டாறு மறைமாவட்டப் பகுதியில் சுமார் 44,500 கத்தோலிக்கர் வாழ்ந்தனர்.

மறைத் தளம்

கத்தோலிக்கர் எண்ணிக்கை

1) கன்னியாகுமரி

4000

2) புத்தன்.துறை

3300

3) பிள்ளைத் தோப்பு

3200

4) குளச்சல்

6000

5) குறும்பனை

?

6) கோட்டாறு

6890

7) காரங்காடு

6500

8) வேங்கோடு

4000

9) இனயம் (தேங்காப்பட்டணம்)

3000

10) முளகுமூடு

7000

மொத்தம்

44,490மேலும், உள்நாட்டு மீனவர்களும் பிற மக்களும் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியதால் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருந்திருப்பர் என்று கூறலாம்.

(ஆதாரம்: சே.ரோ. நற்சீசன், குமரிக் கிறிஸ்தவர்களின் பயணப் பாதை, நாஞ்சில் பதிப்பகம், 2010, பக். 79-83).

8) துன்பங்களுக்கு நடுவே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த மறைசாட்சிகள்

அருளாளர் தேவசகாயம் பிள்ளை (1712-1752)

குமரிப் பகுதியில் கத்தோலிக்க சமயம் வேரூன்ற உழைத்தவரான சவேரியார் இறந்து சரியாக இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், கோட்டாறு மறைமாவட்டத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவ நம்பிக்கைக்காக 1752, சனவரி 14 நள்ளிரவில் ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் கொல்லப்பட்டார். அவருக்கு 2012, டிசம்பர் 2ஆம் நாளில்முத்திப் பேறுபெற்றவர்(அருளாளர்) பட்டம் வழங்கப்பட்டது கோட்டாறு வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்ச்சி ஆகும்.

அருளாளரும் மறைசாட்சியுமான தேவசகாயம் கோட்டாறு மறைமாவட்டத்தில் நாயர் குலத்தில் உதித்தவராயினும் அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படுகின்ற ஒரு கிறிஸ்தவ நம்பிக்கை வீரராகத் திகழ்கின்றார்.

இன்றைய குழித்துறை மறைமாவட்டப் பகுதியில் நட்டாலம் ஊரில் 1712ஆம் ஆண்டு பிறந்த தேவசகாயத்தின் இயற்பெயர் நீலம் பிள்ளை. எஸ்தாக்கு டிலனாய் என்ற டச்சு இராணுவ அதிகாரி நீலம் பிள்ளைக்குக் கிறிஸ்தவ மறையின் உண்மைகளை எடுத்துக் கூறினார். நீலம் பிள்ளை தமது பூர்வீக இந்து சமயத்தை விட்டுவிட்டு, வடக்கன்குளத்தில் இயேசு சபை மறைப்பணித் தளத்தில் கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். மார்த்தாண்ட வர்மா மன்னர் திருவிதாங்கூரில் ஆட்சி செய்த அக்காலத்தில் (1729-1758), தேவசகாயம் பிள்ளை தமது கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு பல துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்தார். இறுதியாக, திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்கு எல்லையில் ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த இடம் இன்றைய புதிய கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ளது.

தேவசகாயம் பிள்ளையின் வீர மரணத்தைக் கோட்டாறு மறைமாவட்ட மக்கள் ஒருபோதும் மறந்ததில்லை. அவர் பிறந்து மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் அவருக்குஅருளாளர்(முத்திப்பேறு பெற்றவர்) என்னும் பட்டம் 2012, டிசம்பர் 2ஆம் நாள் வழங்கப்பட்டபோது, கோட்டாறு மறைமாவட்டம் அந்நிகழ்ச்சியை மிகச் சிறப்புடன் கொண்டாடியது.

இன்று அருளாளரும் மறைசாட்சியுமான தேவசகாயம் பிள்ளை புதிய குழித்துறை மாவட்டத்திற்கும் புதிய கோட்டாறு மறைமாவட்டத்திற்கும் பொதுவான பாதுகாவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிறந்த இடம் குழித்துறை மறைமாவட்டத்திலும் அவர் கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்த இடம் புதிய கோட்டாறு மறைமாவட்டத்திலும் இருப்பது இந்த இரு மறைமாவட்டங்களும் நல்லுறவிலும் இணக்கத்திலும் தொடர்ந்து செயல்படுவதற்கு ஒரு முன்குறியாக உளது எனலாம்.

தேவசகாயம் பிள்ளை மறைசாட்சியாக உயிர்துறந்த நிகழ்ச்சியை திருவிதாங்கூர் பகுதியில் பணியாற்றிய கார்மேல் சபைத் துறவியான பவுலீனுஸ் என்பவர் 1794இல் இலத்தீனில் எழுதிய நூலில் விவரிக்கிறார். (காண்க: கிழக்கு நாடான இந்தியாவில் கிறிஸ்தவம்India Orientalis Christiana – பக். 167-168).

கத்தோலிக்க நாடார் துன்புறுத்தப்படுதல்

கார்மேல் சபைத் துறவி பவுலீனுஸ் மேலே குறிப்பிட்ட நூலில் தேவசகாயம் பிள்ளையின் வீர மரணம் பற்றிப் பேசியதைத் தொடர்ந்து, திருவிதாங்கூரில் கிறிஸ்தவ நாடார் துன்புறுத்தப்பட்டதையும் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது:

1780ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் இராச்சியத்தில் நாகம்பிள்ளை சர்வாதிகாரியக்காரன் என்ற அரசு நிர்வாகி பண ஆசையால் தூண்டப்பட்டு, கிறிஸ்தவ நாடார் மக்கள் தங்கள் வீட்டிலுள்ள பொன், வெள்ளி போன்ற அனைத்து விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்து தன்னிடம் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அவ்வாறு செய்யாவிட்டால் திருவிதாங்கூர் குலதெய்வமான பத்மநாபசுவாமி சிலையை வழிபட வேண்டும் அல்லது அவர்களுடைய உயிருக்கே ஆபத்து என்றும் நிபந்தனை விதித்தார். உயிருக்கு அஞ்சி பல மக்கள் மலைகளுக்கு ஓடிப் போயினர். கையில் அகப்பட்ட சுமார் 300 பேரில் சிலர் சிலையை வழிபட்டனர், ஆனால் எஞ்சியவர்கள் நாகம்பிள்ளையின் அச்சுறுத்தலுக்கு மசியவில்லை. அவர்களை வேங்கோடு, தக்கலை, திருவிதாங்கோடு ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்று, கட்டி மரத்திலிருந்து தலைகீழாகத் தொங்கவிட்டு இரத்தம் சிந்தும் அளவுக்குக் கம்புகளால் அடித்து வதைத்தார்கள். விழுந்த அடிகளைத் தாங்கமுடியாமல் பெலவேந்திரன், அருளன் என்ற இருவர் உயிர் நீத்தனர்.

தன் தந்தை இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டதை அங்கு நின்றுகொண்டிருந்த பத்து வயது சிறுவன் ஒருவன் பார்த்து நெஞ்சம் குமுறினான். அவன்தான் அருளன் மகனான அருளப்பன். அவன் நீதிபதியைப் பார்த்து, “என் அப்பா கிறிஸ்தவர் என்பதற்காக அவரை நீங்கள் இப்படிக் கொன்றீர்கள் என்னால், என்னையும் கொல்லுங்கள், நானும் ஒரு கிறிஸ்தவன் தான்என்று சவால் விட்டுக் கூறினான். சிறுவனை நீதிபதி மிரட்டிப் பார்த்தார். ஆனால் அவன் உறுதியாக இருந்தான். அவனுக்கும் அடிமேல் அடிகொடுத்து அடிபணிய வைக்க முயன்றார் அதிகாரி. ஆனால் அருளப்பனோ, ”என் உடலை வேண்டுமென்றால் நீர் துண்டுதுண்டு ஆக்கிவிடலாம். ஆனால் எனது ஆன்மாவை என் கடவுளிடமிருந்து நீர் பிரிக்கமுடியாதுஎன்று வீரத்தோடு பதிலிறுத்தான்.

தோல்வியுற்ற நீதிபதி கிறிஸ்தவர்களை மறுநாளும் அடித்துத் துன்புறுத்தி, அவர்களுடைய காயங்களில் மிளகுப் பொடி தூவி சித்திரவதை செய்து பார்த்தான். அவர்கள் தங்கள் கிறித்தவ நம்பிக்கையில் விடாப்பிடியாக இருந்ததைக் கண்டு, தன் மேலதிகாரியான நாகம்பிள்ளை என்ற அரசு நிர்வாகியிடம் நடந்ததைக் கூறினான். கிறிஸ்தவ நாடார்களை இம்சைப்படுத்திய செய்தி திருவிதாங்கூர் மன்னரின் காதுகளுக்கு எட்டினால் தனது பெயர் கெட்டுவிடுமே என்று அஞ்சிய அரசு நிர்வாகி நாகம்பிள்ளை, அவசர அவசரமாக அந்த கிறிஸ்தவர்களைச் சிறையில் அடைத்தான். அவர்களுக்கு ஆறுதல் கூறிட திருவிதாங்கோடு மறைத்தளத்தில் பணிபுரிந்த அலோசியுஸ் ஃபால்சான் (Aloysius Falcao) என்ற ஒரே ஒரு இயேசு சபைக் குரு மட்டும் இருந்தார்.

இந்த வரலாற்றை எடுத்துரைத்த பவுலீனுஸ் தாம் மறுநாள் வேறு அலுவலாகத் திருவிதாங்கூர் மன்னரைச் சென்று சந்திக்கவிருந்ததாகக் கூறுகிறார். அவர் மன்னருக்குப் பழக்கமானவர் என்பதை அறிந்த நாடார் கிறிஸ்தவர்கள் இரவோடு இரவாக சிறைக் கதவுகளை உடைத்து வெளியேறி, பத்மநாபபுரம் கோட்டைக்கு அருகில் இருந்த கோவிலில் தங்கியிருந்த பவுலீனுசுவைத் தேடிச் சென்று, அவர்முன் தெண்டனிட்டு விழுந்து, மன்னரிடத்தில் தங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பவுலீனிசிடம் தமிழில் எழுதிய ஓர் எழுத்தோலையைக் கொடுத்தார்கள். அந்த ஓலையில் அவர்கள் எழுதியிருந்த செய்தி இதுதான்; “நாங்கள் மன்னர் சொல்கின்ற எதையும் செய்யத் தயார். அது ஊழியமோ வரியோ அதை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். ஆனால் எங்கள் கத்தோலிக்க நம்பிக்கையை நாங்கள் கைவிட வேண்டும் என்று மட்டும் கேட்க வேண்டாம்.”

எழுத்தோலையைக் கைகளில் பெற்ற பவுலீனுஸ் அவர்களிடம் உடனடியாகச் சிறைக்குத் திரும்பிச் செல்லுமாறு பணித்துவிட்டு, ஆளுநரான குமாரன் செண்பகராமன் பிள்ளையைச் சென்று சந்தித்தார். அவர் கிறிஸ்தவ நாடார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கேள்விப்பட்டு வருத்தம் தெரிவித்தார். கிறிஸ்தவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் சுமார் மூன்று மாதங்கள் கழிந்து தான் ஓரளவு ஓய்ந்தன (காண்க: கிழக்கு நாடான இந்தியாவில் கிறிஸ்தவம்India Orientalis Christiana – பக். 168-174).

மறைப்பணியாளர் பவுலீனுஸ் விவரித்துள்ள நிகழ்ச்சியை மரபுவழி செய்தியும் உறுதிப்படுத்துகிறது. குமரி மாவட்டத்தின் உள்நாட்டுப் பகுதியில் உள்ள மாங்கோடு-கோணத்துவிளை என்ற ஊரில் கத்தோலிக்க நாடார் நடுவே மிக உறுதியான ஒரு மரபுச் செய்தி உள்ளது. அதாவது, அங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்கள் தங்கள் மறைநம்பிக்கைக்கு வித்திட்டவர்அருளப்பன்என்று கூறுகின்றனர். அருளப்பனின் தந்தையான அருளன் என்பவர் வடக்கன்குளத்திலிருந்து தங்கள் ஊரில் வந்து குடியேறினார். அருளப்பனுக்கு சுமார் 12 வயது ஆனபோது, மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள் அச்சிறுவனை பத்மநாபபுரம் கோட்டைக்குக் கொண்டுபோய், அவனை ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, அடித்து நொறுக்கி, அவன் தனது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கைவிட்டுவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். உயிர்நீத்த அருளப்பனின் கல்லறையை இன்றும் மாங்கோடு-கோணத்துவிளையில் காணலாம். அருளப்பனை ஒரு புனிதராகக் கருதி மக்கள் மரியாதை செலுத்துகின்றனர். (ஆதாரம்: Maria A. David, Beyond Boundaries: Hindu-Christian Relationship and Basic Christian Communities, ISPCK, 2009, பக். 19-20).இரண்டாம் கட்டம்

கோட்டாறு மறைமாவட்டத்தின்

முதல் அறுபது ஆண்டுகள்

இன்றைய கோட்டாறு மறைமாவட்டமும் புதிதாக உருவாகியிருக்கின்ற குழித்துறை மறைமாவட்டமும் வட கேரள மாநிலத்தின் பகுதியாகத்தான் திருவிதாங்கூர் இராச்சியத்தில் இருந்தன. 1886இல் அம்மாநிலம் மூன்று பெரிய பிரிவுகளாக ஏற்படுத்தப்பட்டது. வடக்கே மங்களூர், நடுவில் வராப்புழை, தெற்கே கொல்லம். கொல்லத்தின் கீழ் குமரிப் பகுதி திருச்சபைச் செயல்பட்டது.

1902இல் காணப்படும் புள்ளிவிவரம் கீழ்வருமாறு:

பணித்தளம்

கோவில்கள்

கத்தோலிக்கர்

வேங்கோடு

18

4,695

முளகுமூடு

19

9,000

குளச்சல்

7

7,012

காரங்காடு

14

10,294

கன்னியாகுமரி

7

4,774

கோட்டாறு

15

11,924இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோட்டாறு-குழித்துறை மறைமாவட்டப் பகுதியில் கத்தோலிக்கர் எண்ணிக்கை மிக விரைவாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக, வேங்கோடு பணித்தளத்தில் 1902இல் கத்தோலிக்கர் எண்ணிக்கை 4,695 என்பதிலிருந்து 1906இல் 11,800 ஆக வளர்ச்சி பெற்றது.

கொல்லம் மறைமாவட்டத்தில் மறைப்பணி ஆற்றும் பொறுப்பு பெல்ஜிய நாட்டு கார்மேல் சபைத் துறவியரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே கோட்டாறு-குழித்துறை மறைமாவட்டங்களின் பகுதிகளிலும் கார்மேல் துறவியர் பரவலாகப் பணிபுரிந்தனர். 1905ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் கொல்லம் ஆயராக அலோசியுஸ் மரியா பென்சிகர் பொறுப்பேற்றார். பரந்து விரிந்து கிடந்த கொல்லம் மறைமாவட்டத்தை மூன்றாகப் பிரித்தால் மறைப்பணி நன்முறையில் நடைபெற வாய்ப்புப் பிறக்கும் என்று ஆயர் பென்சிகர் சரியாக கணித்தார். எனவே ஆயர் பென்சிகர் திருச்சபையின் தலைமைப் பீடத்தை அணுகி, கொல்லம் மறைமாவட்டத்தை கொல்லம், திருவனந்தபுரம், கோட்டாறு என்று மூன்று தனித்தனி மறைமாவட்டங்களாக உருவாக்குமாறு வேண்டுகோள் சமர்ப்பித்தார்.

1930ஆம் ஆண்டு, மே மாதம் 26ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டம் கொல்லத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மறைமாவட்டம் ஆனது. அதன் முதல் ஆயராக மேதகு லாறன்ஸ் பெரேரா நியமிக்கப்பட்டார். திருவிதாங்கூரின் தென்பகுதியில் தமிழ் கூறும் நன்னிலமாகத் திகழ்ந்த நிலம் கோட்டாறு என்ற பெயரில் தனி மறைமாவட்டமாக உருவெடுத்தது மிகப் பொருத்தமே என்பதை வரலாறு உறுதிப்படுத்துகிறது.

அதே கோட்டாறு மறைமாவட்டம் சுமார் 85 ஆண்டுகளுக்குப் பின்னர் 2014, டிசம்பர் 22ஆம் நாள் மற்றொரு மறைமாவட்டத்தை ஈன்றெடுத்து, குழித்துறை என்ற பெயரில் புதிய மறைமாவட்டம் பிறந்துள்ளது.

பணிபுரிந்த ஆயர்கள்

கோட்டாறு-குழித்துறை மறைமாவட்டங்களின் வரலாற்றுக் கட்டங்களை வரையறுக்கும் வகையில் இங்கு பணியாற்றி வந்துள்ள ஆயர்கள்:

- ஆயர் அலோசியுஸ் மரியா பென்சிகர் (1930, மே 26இல் கோட்டாறு மறைமாவட்டம் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து பிரிந்தபோது ஆயர் பொறுப்பில் இருந்தவர்.)

- ஆயர் லாறன்ஸ் பெரேரா (கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் ஆயர். பணிக்காலம்: 1930-1938)

- ஆயர் தாமஸ் ரோச் ஆஞ்ஞிசாமி, சே.. (கோட்டாறு மறைமாவட்டத்தின் இரண்டாம் ஆயர். பணிக்காலம்: 1939-1971)

- ஆயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (கோட்டாறு மறைமாவட்டத்தின் மூன்றாம் ஆயர். பணிக்காலம்: 1971-1988)

- ஆயர் லியோன் அ. தர்மராஜ் (கோட்டாறு மறைமாவட்டத்தின் நான்காம் ஆயர். பணிக்காலம்: 1988-2007)

- ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்டத்தின் ஐந்தாம் ஆயர். பணிக்காலம்: 2007-. குழித்துறை இவர் பணிக்காலத்தில் 2014, டிசம்பர் 22ஆம் நாள் உருவானது).

(குறிப்பு: கோட்டாறு மறைமாவட்டம் உருவான 1930இலிருந்து அதன் பவள விழா கொண்டாடப்பட்ட 2005ஆம் ஆண்டு வரையிலான விரிவான வரலாற்றை அறிய, காண்க: பவள விழா மலர்: கோட்டாறு மறைமாவட்டம் 1930-2005, தென் ஒலி வெளியீடு, நாகர்கோவில் 2005).மூன்றாம் கட்டம்

குழித்துறை மறைமாவட்ட உருவாக்கச் செயல்பாடு நிகழ்ந்த காலம்

கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து 1930இல் திருவிதாங்கூரின் தமிழ்ப் பகுதி தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது போல, மறைப்பணி இன்னும் அதிக ஊக்கத்தோடும் ஈடுபாட்டோடும் நிகழ்ந்திடும் வண்ணம் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து 2014இல் குழித்துறை என்ற பெயரில் தனி மறைமாவட்டம் உருவாகி இருப்பது குமரிப் பகுதியில் கிறிஸ்தவம் தழைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக உள்ளது.

குழித்துறை மறைமாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முதன்முறையாக உரோமைக்கு எடுத்துச் சென்றவர் ஆயர் லியோன் அ. தர்மராஜ் என்பதாலும், அவரது மறைவுக்குப் பின் கோட்டாறு ஆயராகப் பொறுப்பேற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் பணிக்காலத்தில் குழித்துறை மறைமாவட்டம் பிறந்தது என்பதாலும், இந்த இரு ஆயர்களும் குழித்துறை மறைமாவட்ட உருவாக்கத்திற்கு ஆற்றிய பணியைப் பதிவு செய்வது மிகப் பொருத்தமே.

1. ஆயர் லியோன் தர்மராஜ் காலம் (1989-2007)

2. ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் காலம் (2007-2014)

கோட்டாறு மறைமாவட்டத்தின் நான்காம் ஆயராக மேதகு லியோன் . தர்மராஜ் அவர்கள் 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் நாள் நியமிக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 6ஆம் நாளில், திருக்காட்சிப் பெருவிழாவன்று உரோமை நகரில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவரைக் கோட்டாறு மறைமாவட்டத்தின் நான்காம் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ருவரி மாதம் 5ஆம் நாள் ஆயர் லியோன் கோட்டாறு மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பை ஏற்ற நிகழ்ச்சி கோட்டாறு மறைமாவட்டத் தலைமைக் கோவிலான புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் வைத்து நிகழ்ந்தது.

குழித்துறை மறைமாவட்டம் உருவாவதற்கு அடித்தளம் இட்டவரும் அது உருவாக வேண்டும் என்பதற்காக முழுமூச்சோடு உழைத்தவரும் ஆயர் லியோன் என்றால் மிகையாகாது. அவருடைய வழிநடத்தலும் தலைமையும் உறுதியாக இருந்ததால்தான் கோட்டாறு மறைமாவட்டத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகக் குழித்துறை மறைமாவட்ட உருவாக்க மனு திருச்சபையின் தலைமைப் பீடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது; மேலிடம் கேட்டிருந்த தெளிவுகள் தக்க சமயத்தில் வழங்கப்பட்டன; மறைமாவட்டம் உருவாவதற்கு ஒருசிலரிடமிருந்து எழுந்த தடைகள் நீக்கப்பட்டன. ஆயர் லியோன் தம் இறுதி நாட்களில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்கூட புதிய மறைமாவட்டம் விரைவில் உருவாவதற்கான முயற்சிகளைத் தொடரும்படி திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியத்திடம் கூறியதை எண்ணும்போது குழித்துறை மறைமாவட்டத்தின் பிறப்பு ஆயர் லியோனின் இறப்போடு தொடர்புடையதை அறிந்து நம் உள்ளம் நெகிழ்கின்றது.

(காண்க: “ஆவியிலும் உண்மையிலும்” – ஆயர் லியோன் . தர்மராஜ் நினைவுமலர், தொகுப்பாசிரியர்: இரா. மேரி ஜாண், 16 ஜனவரி 2014, பக். 7-14.)

புதிய மறைமாவட்டம் உருவாகும்போது புதிய ஆயர் தங்குவதற்கான இடம், மறைமாவட்ட மையச் செயலகம், பணிக்குழு அலுவலங்கள் அமையும் இடம் என்றெல்லாம் முன்கூட்டியே கணித்து அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியவரும் ஆயர் லியோன் தான். மேலும் புதிய மறைமாவட்டம் நன்முறையில் செயல்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஆயர் லியோன் கோட்டாறு மறைமாவட்டத்தின் அருள்பணிக் குழுக்களை இரண்டு இரண்டாகப் பிரித்து குழித்துறை மறைமாவட்டத்திற்கென்றும் நேரடியாக அருள்பணிக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழ ஏற்பாடு செய்தார். இத்தகைய அருள்பணிக் குழுக்களுள் கல்விக் குழு, விவிலியக் குழு, மறைக்கல்விக் குழு, வழிபாட்டுக் குழு, சமூக சேவை நிறுவனம், இளையோர் குழு போன்ற பலவற்றை இவண் குறிப்பிடலாம். இக்குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயலர்களை நியமித்தார். அனைத்துப் பணிக்குழுக்களின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, ஒத்த பார்வையோடு செயல்படுவதற்காக பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த அருட்பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரித்துவபுரம் மற்றும் முளகுமூடு வட்டாரத் தலைமைக் குருக்களோடு இணைந்து மறைமாவட்ட உருவாக்கக் குழுவின் பணிகளைக் கூர்மைப்படுத்தினர் என்பதும் இவண் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்ட அருட்பணி இயேசுரத்தினம், அருட்பணி மரிய அல்போன்சு ஆகியோரின் பங்களிப்பு மிகச் சிறந்த விதத்தில் அமைந்தது. இறுதியாக ஒருங்கிணைப்பாளராக அருட்பணி .எம். ஹிலரி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் மறைமாவட்ட உருவாக்கக் குழுவின் பணி நிகழ்ந்தது. குழித்துறை மறைமாவட்டத்தின் இரு மறைவட்டங்களின் (திரித்துவபுரம், முளகுமூடு) தலைவர்களாகச் செயல்பட்ட அருள்பணி ஜார்ஜ் பொன்னையா, அருள்பணி எஸ். வின்செண்ட், அருள்பணி எம். பீட்டர், அருள்பணி . சகாயதாஸ், அருள்பணி எஸ். வின்செண்ட் ராஜ் ஆகியோரும் சிறப்பான விதத்தில் மறைமாவட்ட உருவாக்கக் குழுச் செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் அக்குழுவின் செயலாரகப் பணியாற்றியவர் அருள்பணி பா. றசல் ராஜ். பணிப்பொறுப்பின் அடிப்படையில் தங்கள் பங்களிப்பை நல்கிய இவர்களைத் தவிர இன்னும் எண்ணிறந்த குருக்களும் பொதுநிலையினரும் மறைமாவட்ட உருவாக்கக் குழுவின் பல்வேறு செயல்பாடுகளில் பல்வேறு வழிகளிலும் தருணங்களிலும் உதவி செய்து, கையொப்ப ஆதரவு அளித்து, திருச்சபைத் தலைவர்களை அவ்வப்போது அணுகி மறைமாவட்ட உருவாக்கக் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றது தான் இன்று குழித்துறை என்ற புதிய மறைமாவட்டம் உருவாகிட ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.

மேலும், குழித்துறை மறைமாவட்டம் ஏன் உருவாக்கப்பட வேண்டும், அதனால் விளையக்கூடுமான நன்மை என்ன போன்ற கேள்விகளுக்கும், மறைமாவட்ட உருவாக்கத்தை எதிர்த்து எழுப்பப்பட்ட தடைகளுக்கும் சரியான, நேர்மையான, ஆதாரப்பூர்வமான பதில் அளிக்கும் வகையில் தமிழில் சிற்றேடுகள் தயாரித்து வெளியிடும் பணியில் பலர் ஒத்துழைத்தனர். அவர்களுள் அருள்பணி கு. அமிர்தராஜ், இரா. மேரி ஜாண், மரிய அல்போன்சு ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது.

குழித்துறை மறைமாவட்ட உருவாக்கத் தொடர்பாக ஆயர் லியோன் பணிக்காலத்தில் நிகழ்ந்தவற்றைச் சற்றே விரிவாகக் காணலாம்:

முதலில், கோட்டாறு மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதாக இருந்தால் அதை எந்த எல்லைகளின் அடிப்படையில் பிரிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆயர் லியோன் அவர்கள், குருக்கள் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அப்போது மறைமாவட்ட முதன்மைக் குருவாக இருந்த பவுல் லியோன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இப்பொருள் பற்றிக் கலந்துரையாடி, கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு பணித்தார். அக்குழு ஆயரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் மறைமாவட்டத்தைப் பிரிப்பதற்கென்று புதிய எல்லைகளை அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதாவது, வள்ளியாறு வேளிமலை போன்ற இயற்கை எல்லைகளையோ, கடற்கரை-உள்நாடு என்ற வகையில் எல்லையையோ புதிதாக அமைத்தால் கோட்டாறு மறைமாவட்டத்தின் பங்குகளைத் துண்டுபோட வேண்டிவரும் என்பதாலும், மக்களை சாதி அடிப்படையில் பிரிக்கின்ற தோற்றம் ஏற்பட்டுவிடும் என்பதாலும் அது பொருத்தமாகாது என்ற கருத்து எடுத்துக்கூறப்பட்டது.

மறைமாவட்டம் ஏற்கெனவே கோட்டாறு, திரித்துவபுரம், குளச்சல், முளகுமூடு என்ற நான்கு மறைவட்டங்களைக் கொண்டிருப்பதால் அவற்றுள் இரண்டு மறைவட்டங்களை ஒன்றிணைத்து ஒரு புதிய மறைமாவட்டமாக ஏற்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. எந்த இரண்டு மறைவட்டங்களைச் சேர்ப்பது என்ற பொருளும் ஆயப்பட்டது. மக்கள் தொகை, பங்குகளின் எண்ணிக்கை ஆதாரவளங்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது கோட்டாறு-குளச்சல் மறைவட்டங்களை ஒரு மறைமாவட்டமாகவும் திரித்துவபுரம்-முளகுமூடு மறைவட்டங்களை மற்றொரு மறைமாவட்டமாகவும் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும் என்ற பரிந்துரை ஆயரிடம் வழங்கப்பட்டது. அப்பரிந்துரையைப் பின்னர் ஆயர் லியோன் மறைமாவட்டத்தின் பல்வேறு அமைப்பினரிடமும் சமர்ப்பித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தார். மறைமாவட்ட ஆலோசனைக் குழு, குருக்கள் மன்றம், மறைமாவட்ட அருட்பணி மன்றம் போன்ற பல குழுக்களும் கோட்டாறு மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது மிகப் பயனுள்ளது என்றும், கோட்டாறு-குளச்சல் மறைவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மறைமாவட்டமாகவும், திரித்துவபுரம்-முளகுமூடு மறைவட்டங்களை உள்ளடக்கிய மற்றொரு மறைமாவட்டமாகவும் உருவாக்குவது மிகப் பொருத்தம் எனவும் கூறி, தமது ஆதரவைத் தெரிவித்தன.

1995ஆம் ஆண்டில் புதிய மறைமாவட்டம் உருவாக்குவதற்கான கோரிக்கையை ஆயர் லியோன் தர்மராஜ் தமிழக ஆயர் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அவர்களுடைய ஆதரவைப் பெற்றார். பின்னர் அகில இந்திய ஆயர் பேரவையும் புதிய மறைமாவட்டம் உருவாவது நல்லது என்று கருத்துத் தெரிவித்தது.

இவ்வாறு, புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்டாறு இறைமக்களின் கோரிக்கை தமிழக, மற்றும் இந்திய ஆயர் பேரவைகளின் ஆதரவோடு உரோமை நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கோரிக்கையைத் திருச்சபையின் தலைமைப் பீடத்தின் முன் கொண்டுசென்ற வேளையில் புதிய மறைமாவட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர்களுள் ஒன்றாகியகுழித்துறைஎன்ற பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

1999இல் புதிய மறைமாவட்டம் உருவாக்குவதற்கான கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட திருச்சபையின் தலைமைப் பீடம் புதிய மறைமாவட்டம்குழித்துறை மறைமாவட்டம்என்று அழைக்கப்படும் என்றும் அதை நிறுவி, புதியதோர் ஆயரைப் பொறுப்பாக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும் தகவல் கொடுத்தது. அப்போது மறைமாவட்ட முதன்மைக் குருவாக அருள்திரு எரோணிமுசு பணிபுரிந்தார்.

எழுந்த தடைகள்

கோட்டாறு மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரு பகுதிகளிலும் அருள்பணி சிறப்பாக நடைபெறுவதற்கான முயற்சிகளை ஆயர் லியோன் மேற்கொண்ட வேளையில் அந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து உரோமைத் தலைமை நீதிமன்றத்தில் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருட்பணியாளர் ஒருவர் வழக்குத் தொடுத்தார். புதிய மறைமாவட்டத்தின் எல்லையை வரையறுப்பதில் தவறு நிகழ்ந்தது என்றும், சாதி அடிப்படையில் மறைமாவட்டம் பிரிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டி மறைமாவட்டம் பிரிதலைத் தடுத்துநிறுத்தும் முயற்சியாக அந்த வழக்கு அமைந்தது. ஆனால், திருச்சபைத் தலைமைப் பீடம் கோட்டாறு ஆயரிடமிருந்து விளக்கம் பெற்றதும் அதை ஏற்றுக்கொண்டு, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு, மறைமாவட்ட உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த பெரிய தடை நீங்கியதும், உரோமைத் தலைமைப் பீடம் புதிய மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை வழிநடத்துவதற்குத் தகுந்த ஆயர் ஒருவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. அந்த வேளையிலும் சிலர் மறைமாவட்டப் பிரிதலைத் தடைசெய்ய முயன்றுபார்த்தனர். ஆனால் திருச்சபையின் தலைமைப் பீடம் தான் தொடங்கிய முயற்சியை நன்முறையில் முடிவுக்குக் கொணர்வதில் கருத்தாய் இருந்தது.

மறைமாவட்ட உருவாக்கத்தில் மக்கள் பங்கேற்பு

குழித்துறை மறைமாவட்டம் உருவாவதற்கு முதல் படியாக அமைந்தது ஆயர் லியோன் தர்மராஜ் திருச்சபையின் தலைமைப் பீடத்தை அணுகி, கத்தோலிக்க மக்களை மிகப்பெரும் எண்ணிக்கையில் கொண்டு செயல்படும் கோட்டாறு மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால் புதிய மறைமாவட்டத்திலும் தாய் மறைமாவட்டத்திலும் மக்கள் மைய அருள்பணி ஊக்கத்தோடும் முனைப்போடும் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் என்று கூறி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது ஆகும். அந்த விண்ணப்பத்திற்கு மறைமாவட்ட குருக்களும் இறைமக்களும் ஆதரவும் ஊக்கமும் தூண்டுதலும் அளித்தனர். மறைமாவட்டத்தின் அருள்பணி அமைப்புகளான ஆயர் ஆலோசனைக் குழு, குருக்கள் மன்றம், மறைமாவட்ட அருள்பணி மன்றம் போன்றவையும் ஆயர் கொடுத்த விண்ணப்பத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இவ்வாறு, மறைமாவட்ட உருவாக்கத்தில் மக்கள் பங்கேற்பு தொடக்க காலத்திலிருந்தே இருந்துவந்தது. மக்கள் பங்கேற்பு கூர்மையான வித்த்தில் வெளிப்படுவதற்கு ஒருசில அமைப்புகளும் உதவின. அவற்றுள் முக்கியமாக மூன்றினைக் குறிப்பிடலாம். ஒன்று, “குழித்துறை மறைமாவட்ட உருவாக்கக் குழு. திரித்துவபுரம்-முளகுமூடு மறைவட்டங்களைச் சார்ந்த குருக்கள் மற்றும் பொதுநிலையினர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு 2007ஆம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய குறிக்கோள் கோட்டாறு ஆயரையும் திருச்சபையின் தலைமைப் பீடத்தையும் அணுகி, புதிய மறைமாவட்டத்தை உருவாக்குவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறி, திருச்சபைச் செயல்பாட்டிற்குத் துணைபுரிவதாகும். சில வேளைகளில் இக்குழு பொறுமை இழந்தது என்றாலும், பொதுவாக அமைதி, உரையாடல், ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகிய வழிமுறைகளையே கையாண்டது என்பது தெளிவு. அதுபோலவே குழித்துறை மறைமாவட்டப் பகுதி குருக்களும் அவ்வப்போது கலந்துரையாடி, மறைமாவட்ட உருவாக்கத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஆயருக்கும் திருச்சபைத் தலைமைப் பீட்த்திற்கும் செய்தி அனுப்பியவண்ணம் இருந்தார்கள்.

2013-2014 ஆண்டுகளில் வேறு இரு குழுக்கள் மறைமாவட்ட உருவாக்கத்தை ஆதரித்துச் செயல்படத் தொடங்கின. அவைகுழித்துறை இறைமக்கள் இயக்கம்மற்றும்தேவசகாயம் பிள்ளை இயக்கம்என்பவை ஆகும்.

2014ஆம் ஆண்டு, சனவரி மாதம் 14ஆம் நாள் குழித்துறை மறைமாவட்ட உருவாக்கக் குழுவும் குழித்துறை இறைமக்கள் இயக்கமும் சேர்ந்து ஒரு சிற்றேடு வெளியிட்டு, குழித்துறை மறைமாவட்டம் உருவாகவேண்டும் என்ற கோரிக்கை திருச்சபையின் தலைமைப் பீட்த்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட வரலாற்றை விளக்கினர். மேலும் புதிய மறைமாவட்டத்தின் எல்லை பற்றிய விளக்கமும், பங்குகளின் எண்ணிக்கை, அங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்கள் இனங்களின் எண்ணிக்கை, நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் அதில் தரப்பட்டன.

மக்கள் திருச்சபைத் தலைவர்களை அடிக்கடி சந்தித்து மறைமாவட்ட உருவாக்கம் பற்றிக் கேட்டதோடு நிற்காமல், விரைந்து செயல்படுமாறும் வேண்டினர். அவர்கள் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களின் இசைவோடு இருமுறை திருத்தந்தையின் தூதுவர் பேரருள்திரு சால்வத்தோரே பென்னாக்கியோ என்பவரை சந்தித்து மறைமாவட்ட உருவாக்கம் பற்றிய நினைவூட்டல் குறிப்புகளை நேரடியாகக் கொடுத்தனர். முதன்முறை, திருத்தந்தையின் தூதுவர் இறையூழியர் தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம் அளிக்கும் விழாவில் கலந்துகொள்ள கோட்டாறு மறைமாவட்டத்திற்கு வந்தபோது 2012, டிசம்பர் 2ஆம் நாள் இவ்வாறு செய்தனர்.

இரண்டாவது தடவை திருத்தந்தையின் தூதுவர் 2014, ஆகஸ்டு 24ஆம் நாள் மதுரையில் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் பொறுப்பேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்தபோது கோட்டாறு இறைமக்கள் பிரதிநிதிகள் ஆயர் ரெமிஜியுசோடு தூதுவர் பென்னாக்கியோ அவர்களுடைய கைகளில் மறைமாவட்ட உருவாக்க நினைவூட்டல் கடித்த்தைக் கொடுத்தனர்.

இவ்வாறு பலவகைகளில் இறைமக்களின் பங்கேற்பு இருந்ததால் குழித்துறை மறைமாவட்ட உருவாக்கத்தில் அவர்கள் முழுப் பங்களிப்பு நல்கினர் என்பது தெளிவு.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் ஆயர் லியோன் தர்மராஜ் இறையடி எய்தினார். ஒரு சில மாத இடைவெளிக்குப் பின், கும்பகோணம் ஆயராக அதுவரை பணியாற்றி வந்த மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் கோட்டாறு ஆயராக 2007, ஆகஸ்டு 24ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆயர் ரெமிஜியுஸ் பணிக்காலத்தின்போது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. முதல் நிகழ்வு புது தில்லியில் திருத்தந்தையின் தூதுவர் மாற்றம் பெற்றது ஆகும். அதாவது, குழித்துறை மறைமாவட்ட உருவாக்கம் பற்றி மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய திருத்தந்தையின் தூதுவர் ஆயர் பேத்ரோ லோப்பஸ் குவின்றானா 2009இல் பணிமாற்றம் பெற்றார். அவருக்குப் பின் புது தில்லியில் திருத்தந்தையின் தூதுவராக வந்தவர் ஆயர் சால்வத்தோரே பென்னாக்கியோ 2010இல் தான் பொறுப்பேற்றார். இந்த மாற்றம் நிகழ்ந்ததாலும், இடையே பல மாதங்கள் தூதுவர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்ததாலும் குழித்துறை மறைமாவட்ட உருவாக்க முயற்சி மந்தம் அடைந்தது. புதிய தூதுவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மறைமாவட்ட உருவாக்க விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டியதாயிற்று.

மற்றொரு நிகழ்ச்சி புதிய குழித்துறை மறைமாவட்டம் உருவாதலைத் திருத்தந்தை ஏற்றுகொண்டு, புதிய ஆயரைத் தேர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டது. இதுவும் முறையாக நடந்து முடிய போதிய காலம் தேவைப்பட்டது.

மேற்கூறியவை தொடர்பான விரிவான தகவல்களை 2005-2013 ஆண்டுகளில் கோட்டாறு மறைமாவட்ட முதன்மைக் குருவாகப் பணியாற்றிய அருள்திரு . மரியதாசன் தனிக் கட்டுரையாக வடித்துத் தந்திருப்பதால் விவரங்களை அங்கு கண்டுகொள்க.

குழித்துறை மறைமாவட்டம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களும் வாய்ப்புகளும்

புதியதொரு மறைமாவட்டம் உருவாகின்ற வேளையில் இயல்பாகவே எழுகின்ற சவால்கள் பல உண்டு. அதே நேரத்தில் எங்கே சவால் உளதோ அங்கே வாய்ப்புகளும் உண்டு என்பதே உண்மை. 1930இல் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து கோட்டாறு தனி மறைமாவட்டமாகப் பிரிந்த வேளையில் என்னென்ன சவால்களும் வாய்ப்புகளும் எழுந்தனவோ, அதே சவால்களும் வாய்ப்புகளும் குழித்துறை மறைமாவட்டத்திற்கும் உண்டு எனலாம்.

ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை வேறு, இன்றுள்ள நிலை வேறு என்பதையும் நாம் ஏற்கவேண்டும்.

முதன்முதலில், திருச்சபையின் வாழ்வில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்துள்ள இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் குறிப்பிடலாம். இச்சங்கம் நடந்தபோது (1962-1965) கோட்டாறு ஆயராக இருந்தவர் ஆயர் தாமஸ் ரோச் ஆஞ்ஞிசாமி, சே.. அவருடைய தலைமையிலும் அவருக்குப் பின் மறைமாவட்டப் பொறுப்பை ஏற்ற ஆயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி தலைமையிலும் கோட்டாறு மறைமாவட்டம் ஒரு புதிய பார்வையோடு அருட்பணியைத் தொடர்ந்தது. பின்னர் ஆயர் லியோன் தர்மராஜ் பொறுப்பேற்ற காலத்தில் மறைமாவட்டத்தில் பங்கேற்பு அமைப்புகளும் செயல்பாடுகளும் ஊக்கத்தோடு வளர்ந்தன. மறைமாவட்ட உருவாக்கத்திற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டன.

ஆயர் ரெமிஜியுஸ் பொறுப்பேற்ற நாளிலிருந்தே மறைமாவட்ட உருவாக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. கோட்டாறு-குழித்துறை மண்ணில் பிறந்து, வளர்ந்து, கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்று, அதன்பொருட்டு தம் உயிரையும் கையளிக்கத் தயங்காத ஒரு மறை வீரர்இறையூழியர் தேவசகாயம் பிள்ளைகோட்டாறு மறைமாவட்டத்தின் ஒளிவிளக்காக ஒளிர்ந்தது ஆயர் ரெமிஜியுசின் பணிக்காலத்தில் தான். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் ஆணைப்படி கோட்டாறு-குழித்துறை மண்ணின் மைந்தரான தேவசகாயம் பிள்ளைக்கு மறைசாட்சி மற்றும் அருளாளர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி 2012, டிசம்பர் 2ஆம் நாள் நடந்தபோது கோட்டாறு-குழித்துறை மட்டுமன்றி, இந்திய நாடு முழுவதுமே விழாக் கொண்டாடியது.

இந்நிகழ்வுகளின் பின்னணியில் புதிதாக உருவாகியிருக்கின்ற குழித்துறை மறைமாவட்டம் எதிர்கொள்ளவிருக்கின்ற ஒரு சில சவால்களையும் வாய்ப்புகளையும் மட்டும் இங்கே மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்:

1) குழித்துறை மறைமாவட்டம் மறையறிவிப்புப் பணியையும் கிறிஸ்தவ உருவாக்கப் பணியையும் ஊக்கத்தோடு தொடர வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைப்படி, “திருச்சபை தன் இயல்பிலேயே மறை அறிவிப்புப் பண்பைக் கொண்டுள்ளது.” அதுபோலவே, திருத்தந்தை பிரான்சிசும், “மகிழ்ச்சிதரும் நற்செய்திஎன்னும் போதனை மடலில் திருச்சபையின் பணியைமறையறிவிப்புச் சீடத்துவம்(missionary discipleship) என வரையறுக்கின்றார்.

2) குழித்துறை மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றிப்பினை வளர்க்க வேண்டும். குழித்துறை மறைமாவட்ட நிலப்பகுதியில் தக்கலை சீரோ மலபார் மறைமாவட்டமும், மார்த்தாண்டம் சீரோ மலங்கரா மறைமாவட்டமும் செயல்படுகின்றன. ஒரே கத்தோலிக்க திருச்சபையின் மூன்று வடிவங்களாக உள்ள இந்த தலத் திருச்சபைகள் தங்கள் பணிகளை ஒருங்கிணைத்து, இசைவோடு செயல்படுவது ஒரு சவால் தான். அதே நேரத்தில் கத்தோலிக்க வாழ்வுக்கு அவை எடுத்துக்காட்டாக அமைகின்ற பெரும் வாய்ப்பு உள்ளது. அதுபோலவே, தாய் மறைமாவட்டமான கோட்டாற்றுக்கும், புதிய மறைமாவட்டமான குழித்துறைக்கும் பொதுவான விண்ணக வழிகாட்டிகளாக சவேரியாரும் தேவசகாயம் பிள்ளையும் உள்ளனர். குறிப்பாக, தேவசகாயம் பிள்ளையின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இடங்கள் குழித்துறை மறைமாவட்டத்திலும் புதிய கோட்டாறு மறைமாவட்டத்திலும் அமைந்திருப்பது ஒற்றுமைக்கும் ஒன்றிப்புக்கும் அரிய வாய்ப்புகள் ஆகும். குழித்துறை மறைமாவட்டத்திற்கு உள்ளேயே கத்தோலிக்க சிறுபான்மை, பெரும்பான்மை என்று பல சமூகங்கள் உண்டு. அவை அனைத்தையும் அரவணைத்துச் செல்வது மறைமாவட்டத்திற்குச் சிறப்பு.

3) குழித்துறை மறைமாவட்டத்தில் கத்தோலிக்க சபையோடு சீர்திருத்த சபைகளும் வேறு பல கிறிஸ்தவ சபைகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

4) குழித்துறை மறைமாவட்டத்தில் பல்சமய உரையாடலும் சமய நல்லிணக்கமும் வளர்வதற்கான வாய்ப்புகள் பல உண்டு. குறிப்பாக, சமய வேறுபாடுகளைக் கடந்து, மனித நேய அடிப்படையில் மக்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவதற்கு வழியுண்டு.

5) குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஜெரோம் தாஸ் அவர்கள் சலேசிய சபையைச் சார்ந்தவர். இளையோர் கிறிஸ்தவ நெறியிலும் மனித நேயத்திலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். குழித்துறை மறைமாவட்டம் எல்லா மட்டங்களிலும் கிறிஸ்தவ-மனித உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது ஒரு சவால்.

இறுதியாக,

புதிதாக உருவாகியிருக்கின்ற குழித்துறை மறைமாவட்டம் ஒரு நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்கவிருக்கின்றது. பயணப் பாதை கண்முன்னே தெரிந்தாலும் நேர்வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும். இது ஒரு தனிப் பயணம் அல்ல, மாறாக ஒரு கூட்டுப் பயணம். இந்தக் கூட்டுப் பயணத்திற்கு வழிகாட்டியாக நல்லாயன் இயேசு இருப்பதால் தொடர்க நம்பிக்கைப் பயணம்!